×

தனுசு ராசி: வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்கள் நம் கண்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒரு வஸ்து. நம்மை எந்த வண்ணம் ஈர்க்கின்றதோ, அந்த வண்ணத்துடன் தொடர்புடைய கிரகங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம்மோடு தொடர்புடன் இருக்கும். பொதுவாக, வண்ணத்தை பற்றிய ஆய்வை நாம் செய்வதில்லை என்பதைவிட, இப்பொழுது உள்ள நகர வாழ்க்கையில் சிந்திக்க நேரமில்லை என்றே சொல்ல வேண்டும். எந்த வண்ணம் நம்முடன் தொடர்பில் இருக்கிறதோ, அது நம்மை அறிந்தோ, அறியாமலோ, வழி நடத்தும். நமக்குரிய நேர்மறை வண்ணத்தை வருவித்துக் கொள்வதோ நமது வெற்றிப்பாதை ஆகும்.

தனுசு ராசி காலபுருஷனுக்கு ஒன்பதாம் (9ம்) பாவகமாக வருகிறது. இதை இறைஸ்தானம், பாக்கியஸ்தானம், தந்தைஸ்தானம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில், பூர்வ புண்ணியத்தின் பூர்வ புண்ணியஸ்தானம் என்றுதான் சொல்ல வேண்டும். சென்ற பிறவியில் நன்மை உண்டெனில், இப்பிறவியில் நிச்சயம் பலன் உண்டு. தேடி வந்து பலன் செய்து செய்கின்ற ஸ்தானம் இந்த ஒன்பதாம் (9ம்) பாவக ஸ்தானம்.

அப்படிப்பட்ட ஸ்தானம், ராசி வீடாக வரும் பட்சத்தில், இவர்கள் நற்பலன்களை ஏதேனும் ஒரு வகையில் செய்திருந்தால் மட்டுமே தனுசு ராசி அமையும் என்பது சிறப்பானதாகும். தனுசு ராசியின் அதிபதி குருபகவான். இவரின் தீட்சண்ய பார்வை பல நன்மைகளை வழங்கும் என்பது நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட குரு பகவானுக்கு, உகந்த நிறம் மஞ்சள். மஞ்சள் அதிக அலைநீளமுடைய சிவப்பிற்கும், குறைந்த அலைநீளம் கொண்ட நீலத்திற்கும் இடைபட்ட அதிக அலையுடன் தொடர்புடைய ஒரு வண்ணம்.

ஆகவே, பார்த்தவுடன் ஈர்க்கக்கூடியது. அதிக ஆற்றல்களை உள்ளே கிரகித்து கொள்க்ளகூடிய தன்மை மஞ்சள் நிறத்திற்கு உண்டு. பார்ப்பவர்களின் கண்களை அதிகம் கவரக்கூடிய வண்ணம். மேலும், தங்கத்திற்கு ஈர்ப்பே இந்த மஞ்சள் நிற வண்ணம்தான். தனுசு ராசிக்கு லக்னம் (1ம்) மற்றும் நான்காம் (4ம்) அதிபதியாக இந்த குருபகவான் வருகிறார். தனுசு ராசிக்காரர்கள், ஏதேனும் விஷேங்களுக்கு செல்லும்போது, மஞ்சள் வண்ணத்தை பயன்படுத்தும் போது, தனித்துவமாக காண்பிக்கும். மேலும், இவர்களின் நான்காம் (4ம்) பாவத்துடன் தொடர்பில் இருப்பதால், வீடுகளில் மஞ்சள் வண்ணங்கள் இருப்பது சிறப்பைத்தரும். வாகனங்களிலும் இதே வண்ணத்தை இணைத்து பயன்படுத்திக் கொள்வது சிறப்பைத்தரும்.

தனுசு ராசிக்கு இரண்டாம் (2ம்) மூன்றாம் (3ம்) அதிபதியாக சனிபகவான் வருகிறார். கோட்சாரத்தில், சனிபகவான் சஞ்சாரம் செய்து கொண்டு இருப்பதால், முயற்சி தடைப்பட வாய்ப்புகள் அதிகம். இக்காரணத்தினால், உங்களுக்கு ஆன்மிக நம்பிக்கை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் (5ம்) இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும், (9ம்) பன்னிரெண்டாம் (12ம்) இடத்தையும், பார்வை செய்வதால், சில மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆகவே, நீலம் மற்றும் கரு நீல வண்ணத்தை தவிர்த்துக் கொள்வது நலம் தரும். உங்களால், முடிந்தளவு அன்னதானம் செய்யுங்கள். இதனால், உங்களை நோக்கி வரக்கூடிய இடர்பாடுகள் விலகிப் போகும்.

தனுசு ராசிக்கு ஐந்தாம் (5ம்) மற்றும் பன்னிரெண்டாம் (12ம்) அதிபதியாக மேஷம், விருச்சிக வீடுகளாக செவ்வாய் வருகிறது. ஆகவே, மேஷத்தில் செவ்வாய் பார்வை செய்யும் காலத்திலும், மேஷத்தில் பயணிக்கும் காலத்திலும், சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தும்போது, உங்கள் சிந்தனைகள் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். உங்களின் பிரச்னைகளை நீங்களே எளிமையான தீர்வை கண்டறிவீர்கள்.

தனுசு ராசிக்கு ஆறாம் (6ம்) மற்றும் பதினொராம் (11ம்) அதிபதியாக ரிஷபம் மற்றும் துலாம் ராசி வருகிறது. இதன் அதிபதி சுக்கிரனாக வருகிறார். பிங்க் என்ற இளஞ்சிவப்பு வண்ணம் உங்களுக்கு நன்மை தீமை என இரண்டும் கலந்த நன்மையை வழங்கும். அதாவது, வருமானம் வருகிறபோது, செலவு தயார் நிலையில் இருக்கும். சேமிப்பு இல்லாத அமைப்பு உண்டாக்கும். வெற்றி வருகிறபோது, உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, பிங்க் வண்ணத்தை தவிர்த்துவிட்டு. பிங்க் வண்ண துணிகள் அல்லது பிங்க் நிற பொருட்களை தானமாக வழங்குங்கள் நன்மை பெறுவீர்கள்.

தனுசு ராசிக்கு ஏழாம் (7ம்) மற்றும் பத்தாம் (10ம்) அதிபதியாக புதன் வருவதால், பச்சை நிற வண்ணம் நன்மையை வழங்கும் அமைப்பாக உள்ளது. தரகு அடிப்படையாக செய்யும் தொழில் நன்மை வழங்கும். தனுசு ராசிக்கு எட்டாம் பாவம் கடகம். இதன் அதிபதியாக (8ம்) சந்திரன் வருவதால், வெண்மையை தவிர்த்தல் நலம்.

தனுசு ராசிக்கு ஒன்பதாம் பாவம் சிம்மம். இதன் அதிபதியாக (9ம்) சூரியன் வருவதால், அரசு சார்ந்த முயற்சி நன்மை பயக்கும். ஆரஞ்சு வண்ணத்தை பயன்படுத்தினால், சிறப்பைத்தரும்.
வண்ணங்கள் நமக்கு வசமாகட்டும், நமது வாழ்க்கை வளமாகட்டும்.

தொகுப்பு: சிவகணேசன்

The post தனுசு ராசி: வண்ணங்களும் எண்ணங்களும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா..!!